மீள்வேனோ இம்மையில்?
பதின் வயதில், துயருற்ற வேளையில்,
இளைப்பாறினேன் உன் தோள்களில்!
அதில் பெற்ற உவகையில்,
காதல் மலர்ந்ததே என் உள்ளத்தில்!
ஒய்யாரமான உன் பல்சர் வண்டியில்,
மருதம் நோக்கிய நம் பயணத்தில்!
பின் நோக்கி உதிர்த்த உன் புன்னகையில்
வழுக்கி விழுந்தேனே, மீள்வேனோ இம்மையில்?
நீ என்ன கண்டாய் எதிர் பாலீர்ப்பில்?
என் காதலை சொல்ல நினைக்கையில்,
தடுத்தன உன் எதிர்பாலீர்ப்பு ஆதிக்க எண்ணங்கள்!
இருந்தும், சொன்னேன், பிரிந்தேன்- கூச்சத்தில்!
அரும்பாய் மலர்ந்த வேட்கையிலும் பிழை காணும் ஊரில், தோற்றேனோ எந்தன் காதலில்?
சமூதாயமே, என்ன கோளாறு உன் பார்வையில்!
திருந்தும் எண்ணம் உண்டோ உன்னிடத்தில்?
கடவுளென்று இருந்தால், நான் திட்டியதில்,
உனை தன்பாலீர்ப்பாளராய் மாற்றி இருப்பார் நொடிகளில்.
அவர் இருந்தால், நான் இறந்து, அவரை சேர்கையில்
அவரை தண்டிப்பேன். காதலை அடைவேன் மறுமையில்!